நெல்லையில் பரபரப்பு..!! மீண்டும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்தது ..!!
நெல்லையில் பரபரப்பு..!! மீண்டும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்தது ..!!
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது லிட்டர் ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கின்றனர். பல்வேறு பெரும் நிறுவனங்களும் மின்சார ஸ்கூட்டர், கார்களை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது. நெல்லை மாவட்டம், மானூர் ஒன்றியத்தில் உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் டேனியல் ஆசீர். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணி புரிந்து வருகிறார். இவர் பெட்ரோல் விலை உயர்வால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த டேனியல், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும், தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனையடுத்து டேனியல், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள், தீயில் எரிந்து கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டரின் தீயை அணைத்தனர். தீ விபத்தில் மின்சார ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.